மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு


மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
x

மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை கையேடுகளை வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் 2016-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பை நிறைவு செய்து, மருத்துவ படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்தினார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்கள், தங்களின் திறமையை இந்திய அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், திறமையாக படித்து, அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர் என்பதாலேயே தமிழ்நாடு அரசு, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் என்னும் நுழைவுத்தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, அதை ரத்து செய்யவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிகிச்சை கையேடு

அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிறந்தவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, மருத்துவ படிப்பில் சிறந்து விளங்கி 3 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்ற சென்னை அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி,

சென்னை-ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி, மதுரை அரசு மருத்துவ கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ஆகிய மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த 28 மாணவ, மாணவிகளை முதல்-அமைச்சர் பாராட்டி வாழ்த்தினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்டெதாஸ்கோப் மற்றும் மருத்துவ சிகிச்சை கையேடு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

சிறந்த மாணவர்

இம்மருத்துவ மாணவர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தவிர, ஒவ்வொரு துறையாலும் நடத்தப்படும் சிறப்பு பதக்க தேர்வுகளிலும் பங்கேற்று 3 பதக்கங்களுக்கு மேல் வென்றவர்கள். இந்த பதக்க தேர்வுகள் எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என மிக கடினமான முறைமைகளை கொண்டதாகும். அனைத்து பாடப்பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு "கல்லூரியின் சிறந்த மாணவர்" என்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, சென்னை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்திமலர், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் திருமால்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதக்கங்கள்

முதல்-அமைச்சரிடம் பாராட்டு பெற்ற டாக்டர்கள், மருத்துவ மாணவர்களாக இருந்தபோது பல்வேறு பதக்கங்களை அவர்கள் படித்த கல்லூரிகளில் பெற்றனர். அந்த வகையில், பிரசன்னா வெங்கடேஷ் 12 பதக்கம், சதீஷ்குமார் 11 பதக்கம், பிரித்விராஜ் 9 பதக்கம், பிரவீன் சக்கரவர்த்தி 6 பதக்கம், ஹரிகணேஷ், நஸ்மா, அக் ஷயகுமார் தலா 5 பதக்கம், மோனிஷ்தர்ஷன், வேணு பிரீத்தா, சவுமியா, சங்கமித்திரை, ஜெய்ஸ்ரீ, சக்திஸ்ரீ, சூர்யா ஆகியோர் தலா 4 பதக்கம், அப்துல் ஷாரூக் 3 பதக்கம் என 28 மாணவர்களும் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு

பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பதக்கங்களைப் பெற்ற மாணவர் பிரசாந்த், மாணவி சக்திஸ்ரீ ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு 2016-ம் ஆண்டு மாநில பாடத் திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்துள்ளோம்.

மருத்துவ படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றிருக்கிறோம். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 2016-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த 250 மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளோம்.

கடந்த 2017-ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு மூலம் மருத்துவப் படிப்பைப் படித்த மாணவர்கள் 250 பேரில் இறுதி ஆண்டில் 30 பேர் தோல்வி அடைந்து உள்ளார்கள். நீட் தேர்வு என்பது ஒரு நுழைவுத்தேர்வு மட்டுமே. அது சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பது தவறு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story