தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குறுகாட்டூர் ஊரைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு செல்வகுமார்- ஹேமா தம்பதி மகள் துர்கா தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் முன்னிலை வகித்தார். அரியமுத்து அறக்கட்டளை தலைவர் வீரமணி, நிர்வாகி குணசேகரன் ஆகியோர் மாணவி துர்காவுக்கு பரிசுகள் வழங்கினர்.இதில் தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் லிங்கராஜ், அருள்ராஜ், எழுத்தாளர் கனிராஜ், ரமேஷ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி துர்கா அனைவருக்கும் நன்றி கூறினார்.