கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது- ஈரோட்டில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
ஈரோடு
கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
சிறுபான்மையினர் புறக்கணிப்பு
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி.யுமான பீட்டர் அல்போன்ஸ் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் ஒரு புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும். காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. ஆனால் தமிழக முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லை. சிறுபான்மையினர் அதில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களை சிறுபான்மை, பெரும்பான்மை என பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இங்குள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள் தான். கொங்கு மண்டலத்திலும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.
பதற்றம்
கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி வளர்ச்சியை குறைத்தால் தமிழகத்தின் வளர்ச்சி குறையும். அதை வைத்து தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. நினைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தனது கொள்கைகளை மறந்து அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரிக்கிறது. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்றார். ஆனால் இப்போதுதான் 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கியுள்ளார். மத்திய அரசில் மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உலகிலேயே படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நாடு இந்தியா தான். எதிர்க்கட்சி தலைவர் பதவி அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றது. இதனால் எடப்பாடி பழனிசாமி பொறுப்புடன் பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமி, வேலுமணி போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கோர்ட்டு தடை உத்தரவு பெற்று செயல்படுகின்றனர் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசினார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ராஜன், மாநகர துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, மண்டல தலைவர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.