காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

சிவகாசியில் நாளை மறுநாள் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி


ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி சிவகாசியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, சிவகாசியில் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், திருநாவுக்கரசு, விஜயவசந்த், அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி செயலாளர் விஸ்வநாதன், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். ஆலோசனை கூட்ட பொறுப்பாளராக சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனிநாடார் ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.

ரெய்டு

ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைக்க தமிழகம், பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். பா.ஜ.க.வுக்கு எதிரானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்துவதை பா.ஜ.க. தொடர்ந்து செய்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அதனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறிவு முடிவானது அல்ல. தற்போது ஏற்பட்டுள்ள முறிவை நாங்கள் நாடகமாக பார்க்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன். கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், நியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story