பிரதமர் மோடி உருவ படத்துடன் சுடுகாட்டில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை அடித்து போராட்டம்
பிரதமர் மோடி உருவ படத்துடன் சுடுகாட்டில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மொட்டை அடிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தவசிமுத்து, குமரன் மற்றும் ஆறுமுகம் ஆகிய 3 பேரும் மொட்டை அடித்துக் கொண்டனர். மொட்டை அடித்த போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தையும் கையில் வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.