காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராஜா முத்தையா மன்றம் அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராஜா முத்தையா மன்றம் அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்றும், எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், முதலீட்டாளர்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு, துரையரசன், துணை தலைவர் பறக்கும் படை பாலு, மலர் பாண்டியன். மாநில மனித உரிமை துறை பொது செயலாளர் சைமன்பல்தேசிங், நகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷனவாஸ் பேகம், சுமதி மற்றும் மாநில, மாவட்ட, வார்டு மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருநகர் 2-வது பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அம்மாப்பட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கன்குளம் பழனிக்குமார், உசிலம்பட்டி இளங்கோவன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இதில், மாநில செயலாளர் மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர் பொன்மனோகரன், பகுதி தலைவர் நாகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.