காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாயில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அதிக மக்கள்தொகை கொண்ட ஊராட்சி ஆகும். இங்கு போதிய வாருகால் வசதி, தெருவிளக்கு வசதி செய்து தரப்படவில்லை. மேலும் குப்பைத்தொட்டிகளில் போடப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட யூனியன் அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்கபாண்டி, வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜாபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டீஸ்வரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வெம்பக்கோட்டை வடக்கு வட்டார தலைவர் செல்வகனி, மாவட்ட செயலாளர் சந்திரன், மேற்கு வட்டார துணைத் தலைவர் முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் கார்த்திக் சிவாஜி செய்திருந்தார்.