கண்ணில் கருப்பு துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நளினி, முருகன் உள்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை அனுபவித்த 7 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று அறவழி போராட்டம் நடந்தது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கட்சியினர் பலர் தேனி நேரு சிலை முன்பு குவிந்தனர். கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சாலையோரம் மனித சங்கிலிபோல் அணிவகுத்து நின்றனர். 7 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையோரம் அரை மணி நேரத்துக்கும் மேல் மவுனமாக நின்றனர். இதில், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் சன்னாசி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நேரு பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.