ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசு எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் நிதியை அதானி குழுமத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில் பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக பொதுமக்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை நம்பி செய்த சேமிப்பு முதலீடுகளுக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதம் நடத்த முன்வராத மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் சாலைத்தெரு பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமையில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் நகர்மன்ற உறுப்பினர் ராஜாராம்பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் செல்லத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர்கள் சேகர், திருப்புல்லாணி சேதுபாண்டி, சத்தார், செல்லச்சாமி, அன்வர்அலி நத்தர், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, கவுன்சிலர் மணிகண்டன், சிறுபான்மை அணி இப்ராகிம், இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்கினர்.