காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
குலசேகரம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ேபாராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்
குலசேகரம்,
குலசேகரம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ேபாராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ்கள் இயக்கம்
குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான புலியிறங்கியில் இருந்து இட்டகவேலி, அரமன்னம், நாகக்கோடு வழியாக குலசேகரம் கான்வென்ட் சந்திப்பிற்கு தடம் எண் 13 எம், தடம் எண் 89 எம் ஆகிய பஸ்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இந்த பஸ்கள் இட்டகவேலி, அரமன்னம் வழியாக இயக்கப்படாமல் நேர் வழியாக இயக்கப்படுகின்றன.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சிறைபிடிப்பு
எனவே முன்பு போல் இட்டகவேலி, அரமன்னம் வழியாக பஸ்களை இயக்க வலியுறுத்தி குலசேகரம் பேரூராட்சி 1-ம் வார்டு கவுன்சிலர் எட்வின்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புலியிறங்கி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் காஸ்ட்டன் கிளிட்டஸ் முன்னிலை வகித்தார்.
இதில் குலசேகரம் பேரூராட்சித் தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் விமல் ஷெர்லின் சிங், அயக்கோடு நகர தலைவர் வினுட்ராய், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ்ராஜ், மாவட்ட செயலாளர் செல்வராஜ், வட்டார செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட் டது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குலசேகரம் மற்றும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் 14 பெண்கள் உள்பட 45 பேரை கைது செய்து திருவட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.