காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x

ராகுல்காந்தி எம்.பி.க்கு ஜெயில்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

சாலை மறியல்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மீது குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணாசாலையில் அக்கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அண்ணாசாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடியாத்தம்

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜி.சுரேஷ்குமார் தலைமையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீசார் சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர்.

ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து குண்டு கட்டாக அங்கிருந்து அகற்றி வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story