கும்பகோணத்தில், காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி


கும்பகோணத்தில், காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி
x

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 185 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 185 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோடி குறித்து பேச்சு

கர்நாடக மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து அவதூறாக பேசியதாக போலீசார் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி சூரத் ேகார்ட்டு ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து ராகுல்காந்தியின் எம்பி., பதவி பறிக்கப்பட்டது. இதைக்கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

ஊர்வலமாக வந்தனர்

அதன்படி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத்தலைவர் லோகநாதன் தலைமையில், மாநகர தலைவர் மிர்ஷாவுதீன், மாநிலக்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் முருகராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், ரேகாராணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட முன்றவர்களை ரெயில் நிலையத்தின் வாசலில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 25 பெண்கள் உள்பட 185 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11.50 மணிக்கு கும்பகோணம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. இதனால் ரெயில் நிலையம் பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் விவசாய பிரிவு காங்கிரஸ் கட்சியினர் கும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story