காங்கிரசார் போராட்டம்; எம்.எல்.ஏ. உள்பட 130 பேர் கைது


காங்கிரசார் போராட்டம்; எம்.எல்.ஏ. உள்பட 130 பேர் கைது
x

ராகுல்காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

ராகுல்காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரசார் போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து, கீழ் கோர்ட்டில் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

இதனைக் கண்டித்து, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ. உள்பட85 பேர் கைது

நாங்குநேரி சுங்கச்சாவடியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து காங்கிரசார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழ்செல்வன், அழகியநம்பி, செல்லபாண்டியன் டபிள்யூ.ராஜசிங், நம்பித்துரை, ஜெஸ்கர்ராஜா, சந்திரசேகர், ஜேம்ஸ்போர்டு, வாகைதுரை, ராமஜெயம், ரீமாபைசல், குளோரிந்தாள், ராஜகோபால் உள்ளிட்ட 85 பேரை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நாங்குநேரி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

உருவபொம்மையை எரிக்க முயற்சி

நெல்லையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மையை எடுத்து வந்து எரிக்க முயற்சி செய்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார், உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து பறிமுதல் செய்தனர்.

அப்போது காங்கிரசார் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்ய முயற்சி செய்தபோது, போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மானூர் சொர்ணம், சேவாதள மாநில செயலாளர் அனிஸ், மாவட்ட துணை தலைவர்கள் வெள்ளைபாண்டியன், வாகைகுளம் வனராஜன், எஸ்.எஸ்.மாரியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் குறிச்சி கிருஷ்ணன், மகேந்திர பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் உக்கிரன்கோட்டை செல்லப்பாண்டியன், சின்னப்பாண்டியன், சுடலைமுத்து, அனந்தபத்மநாபன், வட்டார தலைவர்கள் பாக்கிய குமார், அலெக்ஸ், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன், பி.வி.டி.ராஜேந்திரன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திசையன்விளை

இதேபோல் திசையன்விளை பழைய பஸ்நிலைய சந்திப்பில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கே.பி.கே.ஜெயக்குமார், ராதாபுரம் தொகுதி பொறுப்பாளர் வால்டர் எட்வின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜார்ஜ், திசையன்விளை நகர காங்கிரஸ் தலைவர் அல்பர்ட் உள்பட 20 பேரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். இதேபோல் களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story