சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்


சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

கருங்கல்,

சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

தூர்வாராத கால்வாய்

சிற்றாறு பட்டணங்கால்வாய் மூலம் 447 குளங்களும், 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசனம் பெற்று வந்தது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்த நிலையில் இருந்தது.

இதனால் அந்த பகுதி விவசாயிகள், பொது மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை. ஆனால் இன்றோ அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது. சிற்றாறு பட்டணங்கால்வாயை சரியாக பராமரிக்காததாலும், தூர்வாராததாலும் 3 அடிக்கு மேல் மண் நிரம்பியும், புதர், மண்டியும் ஆங்காங்கே உடைந்த நிலையிலும் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக கடை வரம்பு பகுதி வரை முறையாக தண்ணீர் செல்வதில்லை.

காங்கிரஸ் உண்ணாவிரதம்

இந்த ஆண்டும் அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து 3 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை சிற்றாறு பட்டணங்கால்வாய்க்கு திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடாமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நீர்வளத்துறையை கண்டித்தும், விவசாய நிலங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரியும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் கருங்கல் சந்திப்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

எம்.பி.-எம்.எல்.ஏ.

விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் மற்றும் பலர் பங்கேற்று உரையாற்றினர்.

இதற்கிடையே குமரி மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சிற்றாறு பட்டணங்கால்வாயில் சுவாமியார் மடம் பகுதியில் பக்கச்சுவர் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது. தற்போது பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதால் வருகிற 1-ந் தேதி சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரகுபதி, குமார், விஜயகுமார், நகர தலைவர் பால்ராஜ் மற்றும் கருங்கல் பேரூர் காங்கிரஸ் தலைவர் குமரேசன், மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், பால்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story