அய்யப்பசாமி கோவில் மகா கும்பாபிேஷகம்


அய்யப்பசாமி கோவில் மகா கும்பாபிேஷகம்
x

மோகனூரை அடுத்த சென்னாக்கல்புதூரில் அய்யப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்:

மோகனூரை அடுத்த சென்னாக்கல்புதூரில் சபரிசித்தநாதன் அய்யப்பசாமி கோவில் உள்ளது. இங்கு நாகராஜ சாமி, மாளிகை புரத்தம்மன், நவக்கிரகங்கள், கருப்பசாமி, கடுத்தசாமி கோவில்களும் உள்ளன. இக்கோவில்கள் மிகுந்த பொருட்செலவில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர், கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கணபதி, சுதர்ஸன, மகாலட்சுமி மற்றும் நவக்கிர ஹோமம், தீபாராதனை நடந்தது. அய்யப்ப சாமி உற்சவர், மோகனூர் காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் அழைத்துவர சென்றது. அங்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதையடுத்து, வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை, கோபுரகலசம் வைத்தல், அஷ்டபந்த யந்திரம் வைத்தல், மருந்து சாத்துதல், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, அதிகாலை 5.45 மணிக்கு, கோ பூஜை, இரண்டாம் கால பூஜை, பூர்ணாகுதி, கலசப்புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பரிவார தெய்வங்களுடன் கூடிய சபரி சித்தநாதன் அய்யப்பசாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை, நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் பிரசாதமாக வெற்றிலை பாக்கு, தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றுடன், மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story