"ஒப்புதல் அளித்துவிட்டு மாற்றி பேசுவதா?" - அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
கவர்னரை கண்டிக்க திராணி இல்லாமல் அதிமுக வெளியே சென்றது வெட்கக்கேடானது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் அண்ணா, அம்பேத்கர், கலைஞர் என்ற பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்றும் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, முறையாக தேசிய கீதத்துடன் கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கவர்னர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்தும் சொல்லும் உரை. சமூகநீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை கவர்னர் தவிர்த்துள்ளார். அம்பேத்கரின் பெயரை கூட கவர்னர் சொல்ல மறுத்துவிட்டார்.
தேசிய கீதத்துக்கு உரியமரியாதையை கவர்னர் அளிக்கவில்லை, தேசிய கீதத்துக்கு முன்பு அதிமுகவினர் வெளியேறிது. அநாகரிகமானது. அரசின் உரையை கவர்னருக்கு 5-ம் தேதியே முறையாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஒப்புதல் அளித்துவிட்டு பேரவையில் மாற்றி வாசிப்பது ஏற்க தக்கது அல்ல. அரசுடன் கவர்னருக்கு கருத்துமோதல் இருந்தபோதும் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக, உரையை முரணாக வாசித்துள்ளார்.