பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை

நாகப்பட்டினம்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்ைத அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

முன்னாள் ராணுவ வீரர்

நாகை அருகே நாகூர் பொறையாத்தா கடை தெருவில் வசிக்கும் 107 வயது முன்னாள் ராணுவ வீரரான கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்று வழங்குவதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அவரது வீட்டுக்கு வந்தார்.

அப்போது கோபாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த அமைச்சர், கோபாலகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து மக்களை தேடி மருத்துவத்துக்கான பெட்டகத்தினையும், வாழ்நாள் சான்றிதழையும் வழங்கினார்.

அப்போது தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கருவூல ஆணையர் விஜயேந்திர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாழ்நாள் சான்றிதழ்

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று கருவூலத்துறை அதிகாரிகள் வாழ்நாள் சான்றிதழை வழங்கி வருகின்றனர்.

அதன்படி நாகை மாவட்டம் நாகூரில் 107 என்கிற தமிழகத்தில் அதிக வயதுடைய கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு கருவூலத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரடியாக வந்து சான்றிதழை வழங்கி உள்ளோம்.

1916-ம் ஆண்டு பிறந்த கோபாலகிருஷ்ணன் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றினார். தொடர்ந்து சுங்கத்துறையிலும், போலீஸ் துறையிலும் பணியாற்றி 1972-ம் ஆண்டு ஓய்வு பெற்று அரசின் ஓய்வூதியத்தை பெற்று வருகிறார்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். தமிழ் மொழியை யாராலும் எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கருவூலத்துறை மாவட்ட அலுவலர் சந்தானகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கோரிக்கை மனு

நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம் தலைமையில் ஜமாத்தார்கள் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், நாகூரில் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாகூர் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுவதால் வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதமடைகிறது.

எனவே நாகூரில் புதிய மின்மாற்றிகளை அமைத்து சீரான மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும். நாகூரை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும். நாகூர் நுழைவு வாயிலில் தோரண நுழைவு வளைவு அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story