பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி சாவு மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி சாவு மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x

திருத்தணி அருகே தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்ததில், கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஜனப்ரியன், யுகி என்ற இரண்டு மகன்களும், யுகிதா என்ற மகளும் உள்ளனர். யுகிதா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு பாலாஜி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பாலாஜியையும் அவரது மகள் யுகிதாவையும் கடித்தது. இதனால் அவர்கள் வலியால் துடித்தநிலையில்,விஷம் ஏறியதால் அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர். கணவர் மற்றும் மகள் இருவரும் வாயில் நுரையுடன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதா தனது உறவினர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் இருவரையும் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பாலாஜி, அவரது மகள் யுகிதாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி யுகிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story