ரூ 25 கோடியில் 19 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி மும்முரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.25¼ கோடியில் 19 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக கட்டும் பணி மும்முரமாக நடந்து வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்
சின்னசேலம்
கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியே எலியத்தூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகள் திட்டம் 2021-2022 -ன் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
19 உயர்மட்ட பாலங்கள்
தமிழகத்திலுள்ள அனைத்து தரைமட்ட பாலங்களையும் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகள் திட்டத்தின் வாயிலாக 19 தரைமட்ட பாலங்களை உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்துவதற்கு ரூ.25 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 11 தரைமட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயிலும், 8 பாலங்களில் முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
மழைக்கு முன்னதாக
சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியாக எலியத்தூர் செல்லும் சாலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும்வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் தரம் மற்றும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டுள்ளேன்.
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானப்பணி) கே.எஸ்.ராஜகுமார், உதவி கோட்டப் பொறியாளர் மணிமொழி, உதவிப்பொறியாளர் தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.