521 உட்புற சாலைகள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம்-1 ஆகிய திட்டங்களின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் ரூ.291 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் 3,108 உட்புற சாலைகள், ரூ.76 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 87 பஸ் தட சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், ரூ.47 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் 521 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.72 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 795 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதேபோல, ரூ.49 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 58 பஸ் தட சாலைகள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் -1 மற்றும் இதர திட்டங்களின் கீழ் ரூ.137 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் 1,382 உட்புறச் சாலைகள் மற்றும் ரூ.25 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 26 பஸ் சாலைகள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், பல்வேறு மண்டலங்களில் உட்புறச் சாலைகளுக்கு ரூ.97 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 917 சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.