ரூ.14 கோடியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை
ரூ.14 கோடியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை
மேட்டுப்பாளையம்
சிறுமுகையை அடுத்த லிங்காபுரம்-காந்தவயல் இடையே காந்தையாற்றின் குறுக்கே பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உயர்மட்ட பாலம் உள்ளது. மழைக்காலங்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயரும்போது, அந்த பாலம் மூழ்கி விடும். அந்த சமயத்தில் பாலத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காந்தையாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய உயர்மட்ட பாலம் கட்ட ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டது. அணையின் அதிகபட்ச நீர்மட்ட உயரத்தை விட 3.4 மீட்டர் உயரத்தில் 7 தூண்களுடன் 168 மீட்டர் நீளம், 9.9 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
இதையடுத்து நேற்று நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை பொறியாளர் அருள்மொழி, பாலம் கட்டப்பட உள்ள பகுதியை ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் சோமசுந்தரம், உதவி கோட்ட பொறியாளர் கோதை ஆகியோர் உடனிருந்தனர். இந்த பாலம் கட்டும் பணி 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.