பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரம்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பழைய கட்டிடம்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் இருந்தது. இது கடந்த 1972-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனால் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதன் காரணமாக பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்ைக எழுந்தது.
இதையடுத்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக செயல்பாடுகள், கோவை ரோட்டில் உள்ள அம்மா திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
பணிகள் மும்முரம்
இதைத்தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அங்கு முதல் தளத்தில் ஒன்றியக்குழு தலைவர், ஆணையாளர், பொது பிரிவு, கூட்டரங்கு உள்ளிட்ட அறைகள் கட்டப்படுகின்றன. 2-வது தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்), கூட்டரங்கு, கழிப்பிடம் போன்ற அறைகளை கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைந்து பணியை முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த பணி முடிந்ததும், புதிய கட்டிடத்தில் ஒன்றிய அலுவலகம் செயல்பட தொடங்கும் என்றனர்.