கோயம்பேட்டில் ரூ.10 கோடியில் பூங்கா அமைக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


கோயம்பேட்டில் ரூ.10 கோடியில் பூங்கா அமைக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x

சென்னை கோயம்பேட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.10 கோடியில் பூங்கா அமைய உள்ள இடத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) மானியக் கோரிக்கையின் போது அதன் தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு 50 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னை கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும், தியாகராயநகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தது.

கள ஆய்வு

இதற்கிடையே, இந்த இடங்களில் அமைச்சர் சேகர்பாபு நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24-ம் ஆணடுக்கான மானியக் கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, 22 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கிறோம். இப்பணிகளை தொடங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ. வரலாற்றில் இதுபோன்று மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாட்டுப்பணிகள் உடனடியாக துரிதப்படுத்தக்கூடிய நடவடிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் நடந்திருக்கின்றன.

மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்

மெகா திட்டங்களான சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், கடற்கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதி வரை 5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல், மாமல்லபுரத்தில் பஸ்நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் சி.எம்.டி.ஏ. முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரபாகர ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story