கீழடியில் ரூ.25 லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி


கீழடியில் ரூ.25 லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 11:36 AM GMT)

கீழடியில் புறக்காவல் நிலையம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,ஜூலை.10-

கீழடியில் புறக்காவல் நிலையம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கீழடி

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றியதில் கீழடிக்கு பெரும் பங்கு உண்டு. திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி பகுதியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். பின்பு இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகம் திறந்து விடப்பட்டது. அதன்பின்பு ஏப்ரல் மாதம் முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினர், பொதுமக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தினசரி சுமார் 1,500 பார்வையாளர்களும், விடுமுறை தினங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாகவும் உள்ளது. தினசரி பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களும் அதிகமாக வருவதாலும் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இருக்க இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

புறக்காவல் நிலையம்

அதன் பேரில் கடந்த மாதம் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை மற்றும் அரசு அதிகாரிகள் கீழடிக்கு நேரில் வந்து புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான சில இடங்களை பார்வையிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று கீழடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புறக் காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், மணியன், ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரபு, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த புறக்காவல் நிலையம் அருங்காட்சியக கட்டிடம் வடிவமைத்தது போலவே, செட்டிநாடு கட்டிடக்கலையுடன் அருங்காட்சியக முகப்பு தோற்றம் மாதிரி அமைய உள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story