ரூ.30¾ கோடியில் தடுப்பணை கட்டும் பணி
சீர்காழி அருகே திருநகரியில் ரூ.30¾ கோடியில் தடுப்பணை கட்டும் பணியை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருநகரியில் ரூ.30¾ கோடியில் தடுப்பணை கட்டும் பணியை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
கடல் நீர் உட்புகுவதால்...
சீர்காழியில் உப்பனாறு உள்ளது. இந்த உப்பனாற்றின் இருபுறங்களிலும் திருமுல்லைவாசல், திருநகரி, எடமணல், சட்டநாதபுரம், திட்டை, சீர்காழி, தென்பாதி, பணமங்கலம், கரைமேடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் கோடைக்காலங்கலில் இந்த ஆற்றில் கடல் நீர் உட்புகுவதால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உப்பு நீராக மாறி வருகிறது.
இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உப்பனாற்றில் கடல் நீர் உட்புகாத வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என மேற்கண்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி அருகே திருநகரி என்ற இடத்தில் உப்பனாற்றில் ரூ.30 கோடியே 96 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தடுப்பணை கட்டுமான பணி
இந்த நிலையில் தடுப்பணை கட்டுமான பணி தாமதமாக நடைபெறுவதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் செய்து வந்தனர். இதையடுத்து இந்த தடுப்பணை அமைக்கும் பணியை திருச்சி நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தடுப்பணை கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கனக சரவணன், சேதுபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.