கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி


கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 11 Sept 2023 12:30 AM IST (Updated: 11 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-மசினகுடி இடையே பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-மசினகுடி இடையே பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மசினகுடி பகுதிக்கு சாலை செல்கிறது. இதுதவிர மாயார், சிங்காரா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முதுமலை வழியாக கூடலூருக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் தெப்பக்காடு பகுதியில் உள்ள மாயாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் பாலம் கட்டப்பட்ட இருந்தது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலம் என்பதால், பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த 2018- 2019-ம் ஆண்டு புதிய பாலம் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு சொந்தமான தரைப்பாலம் வழியாக பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அவதி

அஸ்திவாரம் போட்ட பின்னர் பணி அப்படியே நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அவர்கள் மாயாற்றுக்குள் இறங்கி சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதனால் புதிய பாலம் கட்டும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

3 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாயாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் மசினகுடி ஊராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி, முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்வதற்கு மாயாற்றின் குறுக்கே இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story