அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி


அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
x

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை இன்று கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக பேகோபுரத்தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும் திருவண்ணாமலை தேரடி வீதியில் கான்கிரீட் சிமெண்டு சாலைகள் அமைப்பதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சித்துறை ஆகிய 3 துறைகள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த பணியின் மொத்த அளவு 1080 மீட்டர் அதில் தற்போது 350 மீட்டர் அளவிற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் நகராட்சியின் மூலமாக 12 பாதாள சாக்கடைகள் மற்றும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

மேலும் பே கோபுரம் அருகில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம் வரை 200 மீட்டர் அளவில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க பள்ளம் தோண்டி சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி மூலம் 9 பாதாள சாக்கடை குழி புதியதாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

5-ந் தேதிக்குள்...

தற்போது நடைபெற்று வரும் இப்பணியை வருகிற 5-ந் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் காவல் துறையின் மூலமாக சாலை போக்குவரத்துகளை உடனுக்குடன் சரி செய்து பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், தாசில்தார் சரளா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story