குடிநீர், பாதாள சாக்கடை குழாய் அமைக்க இரும்பு பாலம் கட்டும் பணி தீவிரம்


குடிநீர், பாதாள சாக்கடை குழாய் அமைக்க இரும்பு பாலம் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய் அமைக்க இரும்பு பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரையும், புதுநகரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட கன மழையின் காரணமாக கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, இரும்பு பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன்பிறகு மற்றொரு பகுதி இடிந்து விழுந்தது. ஏற்கனவே அந்த பாலத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டதால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

ரூ.1½ கோடியில் இரும்பு பாலம்

இருப்பினும் அதன் வழியாக சென்ற குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் உடைந்து விழுந்தது. அதன்பிறகு அந்த குழாய்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆங்கிலேயர் காலத்து இரும்பு பாலத்தை முழுமையாக அகற்றி விட்டு, புதிதாக அந்த இடத்தில் சுமார் ரூ.29½ கோடி செலவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி வேறு இடத்தில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குழாயும், குடிநீர் குழாயும் செல்லும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே இரும்பு பாலத்திற்கு வடக்கு புறத்தில் சிறிய இரும்பு பாலம் அமைக்க ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணி தீவிரம்

அந்த நிதியில் இருந்து பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்து கெடிலம் ஆற்றில் தண்ணீர் சென்றதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு இந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே தற்காலிக சாலை அமைத்து கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், நேற்று இரும்பு பாலம் பொருத்தும் பணி நடந்தது. ராட்சத எந்திரம் மூலம் ஒவ்வொன்றாக அவை தூக்கி வைக்கப்பட்டது. இந்த பணியை நேற்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர் சேஷாத்திரியிடம், மழைக் காலத்திற்குள் பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகர செயலாளர் ராஜா, மண்டல தலைவர் பிரசன்னா, தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உடனிருந்தனர்.


Next Story