ரூ.1 கோடி மதிப்பில் நரிக்குறவர் விற்பனை அங்காடி கட்டும் பணி
திருவண்ணாமலையில் ரூ.1 கோடி மதிப்பில் நரிக்குறவர் விற்பனை அங்காடி கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை ஈசான்யலிங்கம் அருகே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டம் மற்றும் கனிமவள நிதியுதவி மற்றும் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியுதவியுடனும் ரூ.1 கோடி மதிப்பில் நரிக்குறவர் விற்பனை அங்காடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 36 கடைகள் நரிக்குறவர்கள் (பழங்குடியினர் இன மக்கள்) வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட உள்ளது.
மேலும் இந்த நரிக்குறவர் விற்பனை அங்காடிக்கு நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவர், இருபாலருக்கும் தனித்தனி சுகாதார வளாகம் வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.
இந்த பணியினை கலெக்டர் முருகேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தரமாக கட்டப்பட வேண்டும். வருகிற செப்டம்பர் 15-ந் தேதி இந்த நரிக்குறவர் விற்பனை அங்காடி திறக்கப்பட உள்ளது.
எனவே இப்பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ரிஷப், ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையது சுலைமான், உதவி திட்ட அலுவலர் ஜான்சன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் அருணை வெங்கட், திருவண்ணாமலை ஒன்றிய ஆணையாளர் பிரித்திவிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.