ரூ.9 கோடியில் வெளிநோயாளிகள் பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடியில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு புதியகட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. அதை கோவை மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் மருத்துவ துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
வால்பாறை
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடியில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு புதியகட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. அதை கோவை மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் மருத்துவ துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
அரசு ஆஸ்பத்திரி
வால்பாறை நகரம் மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதி மக்கள் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 100 ஆண்டுகளை கடந்த இந்த ஆஸ்பத்திரி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவ வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு போதிய வசதியின்றி இருந்தது. இதனால் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே தமிழ்நாடு அரசு சுகாதார துறை சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்காக புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிய கட்டிடம் கட்டும் பணி
இந்த புதிய கட்டிடம் கட்டும் பணியை கோவை மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் மருத்துவ துறை இணை இயக்குனர் சந்தரா நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், அந்த புதிய கட்டிடத்தில் வெளி நோயாளிகளுக்கு தேவையான வசதிகள், பிணவறை, டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான வசதிகள், சிகிச்சைக்கான வசதிகள், சமையலறை உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், மழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக கட்டிட பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும். மேலும் கட்டிட பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்றார்.
தொழில்நுட்ப பணியாளர்
இதையடுத்து இணை இயக்குனர் சந்தரா நிருபர்களிடம் கூறியதாவது:-
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. எடுக்க தொழில்நுட்ப பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்கேன் எடுக்கும் பணியை செய்ய பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொழில்நுட்ப பணியாளர் வந்து செல்கிறார்.
கோவை மாவட்டம் முழுவதும் ஸ்கேன் தொழில்நுட்ப பணியாளர் பணி யிடம் காலியாக உள்ளது. பணியாளர்கள் நிரப்பப்படும் போது வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு நிரந்தரமாக தொழில்நுட்ப பணியாளர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குழந்தை இறந்தது ஏன்?
அவரிடம், சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது குறித்து கேட்ட போது, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து முடியாத நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரசவம் நடைபெற்ற போது தொப்புள் கொடி, குழந்தையின் தலையை சுற்றியது.
இதனால் தாயிடம் இருந்து குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் முழுமையாக கிடைக்காததால் குழந்தை இறந்து பிறந்தது என்றார்.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அனைத்து விதத்திலும் பொது மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மருத்துவமனை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.






