ரூ.1 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி; எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்


ரூ.1 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி; எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
x

நெல்லையில் ரூ.1 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் 3 ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் டவுன் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை ஸ்ரீபுரம் எஸ்.என்.ஹைரோட்டில் இருந்து ஊருடையார்குடியிருப்புக்கு செல்லும் சிவசக்தி ரோட்டில் புதிய தார்சாலை அமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.

நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கீதா, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவுக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வந்தபோது அவருக்கு தாமரை சின்னம் பொறித்த குடையை பா.ஜனதாவினர் பிடித்தனர். பின்னர் அங்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வந்தபோது, அவருக்கும் சேர்த்து குடைபிடிக்கப்பட்டது. இதனைக் கண்ட தி.மு.க.வினர் குடையை அப்புறப்படுத்துமாறு குரல் எழுப்பினர். ஆனால் பா.ஜனதா தொண்டர்கள் மறுத்ததால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இரு கட்சி தொண்டர்களையும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சமாதானப்படுத்தினார்.


Next Story