ரூ.9½ லட்சத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
ஜோலார்பேட்டை அருகே ரூ.9½ லட்சத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையப்பன் நகர் ஊராட்சி, பூக்காரன் வட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை போடப்பட்டது.
இந்த சாலை காலப்போக்கில் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் நடவடிக்கையால் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன், ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கி புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நிர்மலா சஞ்சய், வார்டு கவுன்சிலர் தனலட்சுமி சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.