பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணி

2-வதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணியை கோவை சிறைத்துறை மேற்கொண்டு உள்ளது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையில் 2,100 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நஞ்சப்பா ரோட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கைதிகள், 10 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இது போல் சிறை அங்காடியில் 4 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் உள்ளே செல்லும் இடத்திற்கு அருகே பாரதியார் சாலையில் இந்திய ஆயில் நிறுவனத்துடன் 2 -வதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணியை கோவை சிறைத்துறை மேற்கொண்டு உள்ளது.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் கூறுகையில், கோவை சிறை நிர்வாகம் சார்பில் டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விற்பனை முதலிடத்தில் உள்ளது.
இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை விற்பனை நடைபெறுகிறது. தற்போது பாரதியார் சாலையில் புதிதாக தொடங்கப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 30 கைதிகள், 10 அலுவலர்கள் பணியாற்றுவார்கள் என்றார்.






