400 ஆண்டுகள் பழமையான வெள்ளகவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி


400 ஆண்டுகள் பழமையான வெள்ளகவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி
x

கொடைக்கானல் அருகே 400 ஆண்டுகள் பழமையான வெள்ளகவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

பழமையான கிராமம்

கோடை வாசஸ்தலங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்ததும், 'மலைகளின் இளவரசி' என்றும் போற்றப்படும் கொடைக்கானலில் பழமையான கிராமங்களில் வெள்ளகவியும் ஒன்று. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அவர்கள் ஓய்வெடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இடமே கொடைக்கானல். கொடைக்கானலை சென்றடைய ஆங்கிலேயர்கள் முதலில் கண்டறிந்த வழிப்பாதை வெள்ளகவி கிராமம். அவர்கள் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி வழியாக வெள்ளகவி கிராமத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து வட்டக்கானல் வழியாக கொடைக்கானலை கண்டறிந்தனர். இதனால் வெள்ளகவி கிராமம் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கிராமத்தில் தற்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த வெள்ளகவி கிராமத்திற்கு நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இல்லை. இதனால் கரடு, முரடான மலைப்பாதையை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். தங்களது கிராமத்தில் விளைந்த விவசாய பொருட்களை தலைசுமையாகவும், குதிரைகளில் ஏற்றியும் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கொடைக்கானல் அல்லது பெரியகுளத்திற்கு நடந்தே சென்று வந்தனர். மேலும் கிராம மக்களில் யாராவது நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் நிலையும் இருந்தது. அதேபோல் சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மாணவ-மாணவிகள் உயர்கல்வியும் கனவாக இருந்தது. இருப்பினும் சாலை வசதி கேட்டு தங்களது கோரிக்கையை அவ்வப்போது வலுப்படுத்தி வந்தனர்.

சாலை அமைக்கும் பணி

இந்தநிலையில் வெள்ளகவி கிராம மக்கள், சாலை வசதி கேட்டு 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' பிரிவுக்கு மனு கொடுத்தனர். மேலும் வெள்ளகவி கிராம மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் முயற்சி மற்றும் மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் ஆகியோரின் தீவிர நடவடிக்கையால் வெள்ளகவி கிராமத்திற்கு தற்போது சாலை வசதி கிடைத்துள்ளது. இதற்காக வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சாலை அமைத்திட ஏதுவாக ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. முதல்கட்டமாக கொடைக்கானல் ஒன்றிய ஆணையாளர் விஜய சந்திரிகா, ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன் ஆகியோரின் மேற்பார்வையில் சாலை அளவீடு செய்யும் பணியும், மண்ரோடு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வெள்ளகவி கிராம மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.


Next Story