10 ஏக்கரில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை
தர்மபுரி பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கூரை வசதியுடன் நெல் சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர் தெரிவித்தார்.
சேமிப்பு கிடங்கில் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் 7 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மாயமாகி விட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து ஆய்வு செய்த கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் அப்படி எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறினர்.
இதனிடையே தொடர்ந்து அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தரக்கட்டுப்பாட்டு குழு
இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் மொத்தம் 5,56,947 மூட்டைகளில் மொத்தம் 22,273 மெட்ரிக் டன் நெல் இருப்பு கடந்த பிப்ரவரி 2023-ஆம் மாதத்தில் வைக்கப்பட்டது. இதில் இருப்பு குறைவு உள்ளதாக புகார் வந்ததை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கிடங்கில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் உரிய விதிமுறைகளின்படி கண்காணித்து அரவை ஆலைகளுக்கு அனுப்பி அதனுடைய எடை மற்றும் மூட்டைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது.
தற்பொழுது அனைத்து நெல் மூட்டைகளையும் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5,56,947 மூட்டைகளின் எண்ணிக்கை சரியாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும் அட்டிகள் அடுக்கும் பொழுது சிதறிய நெல் மணிகள் தனியே சுத்தம் செய்து மூட்டைகளில் பிடித்து ஆலைக்கு அனுபப்பட்டது.
10 ஏக்கர் நிலம்
தர்மபுரி மாவட்டத்தில் 80 அரவை ஆலைகள் அரவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களிலிருந்து ரெயில் மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது. எனவே நெல் சேமிப்பு கிடங்கு மேற்கூரை வசதியுடன் கட்ட சுமார் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி, நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக மதிப்பீட்டு அறிக்கை மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.