கிடப்பில் போடப்பட்ட அரை வட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்


கிடப்பில் போடப்பட்ட அரை வட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்க  வேண்டும்
x

கிடப்பில் போடப்பட்ட அரை வட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்

திருவாரூர்

திருவாரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிடப்பில் போடப்பட்ட அரை வட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு திருவாரூர் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருவாரூர் வழியாக செல்கின்றது. மேலும் காரைக்கால் துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள், கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களை ஏற்றி கொண்டு கேரளா செல்லும் வாகனம் என திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்

இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை, காட்டூர், சேந்தமங்கலம் வழியாக கிடாரங்கொண்டான் வரை அரைவட்ட புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் ஆர்ஜிதப்படுத்தப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் அரை வட்ட புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருவாரூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதில் மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற பகுதி வாகனங்கள் அனைத்தும் நகர் பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

கட்டுப்படுத்த நடவடிக்கை

இந்தநிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் திருவாரூர் அரைவட்ட புறவழிச்சாலை திட்ட பணிகளை உடனடியாக தொடங்கி வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் நகருக்குள் வராமல் அரை வட்ட புறவழிச்சாலையை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி புறவழிச்சாலை அமைப்பதற்கு இடம் கையகப்படுத்தும் பணிகளில் மாவட்ட வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். எனவே திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட அரை வட்ட புறவழிச்சாலை திட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்

திருவாரூர் பகுதியை சேர்ந்த வரதராஜன் கூறுகையில்:-

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு தேவையான அளவில் அடிப்படை வசதிகள், குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். இதனால் புறவழிச்சாலை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.அதன்படி திருவாரூர் பகுதியில் அரை வட்ட புறவழிச்சாலையாக அமைக்க திட்டமிட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் அதற்கான பணிகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்கி நிறைவேற்றினால் திருவாரூர் நகர் பகுதி போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுப்படுவதுடன், வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

காலத்தின் மிக அவசியமாகிறது

திருவாரூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில்:-

தஞ்சை-நாகை பிரதான சாலை பகுதி திருவாரூர் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் நாள்தோறும் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற பகுதிக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வாகன போக்குவரத்து நெருக்கடியில் திருவாரூர் சிக்கி தவித்து வந்தது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கன் என போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலுடன் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் புறவழிச்சாலை என்பது காலத்தின் மிக அவசியமாகிறது. அதனை உடனே நிறைவேற்றிட வேண்டும் என்றார்.


Next Story