கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
கூடலூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கூடலூர்
கூடலூர் நகர பகுதியில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்புகளின் பிடியால் நாளுக்கு நாள் குறுகலாகி வருகிறது. கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் தனியார் பள்ளிக்கூடம் முன்பு உள்ள இடங்களில் மண்மேடுகள் காணப்பட்டது. முக்கிய சாலை என்பதால் தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். மேலும் ஆர்.டி.ஓ., தாசில்தார், கருவூலகம், போலீஸ் நிலையம் என அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளதால் அதிக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சாலையோர மண் மேடுகளால் சாலை அகலம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் மற்றும் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் மண்மேடுகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மண் மேடுகளை அகற்றினர். இதனால் சாலையும் அகலமானது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சிரமமின்றி சென்று வர முடிந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் கழிவுநீர் ஓடவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் மூலம் பல லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.