ரூ.5 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி தீவிரம்
திருச்சி கம்பரசம்பேட்டையில் ரூ.5 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, கயல்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருச்சி கம்பரசம்பேட்டையில் ரூ.5 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, கயல்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி பச்சமலையில் வசித்து வரும் பழங்குடியின சுயஉதவிக்குழு மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு பசு மற்றும் காளை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகே உள்ள ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகே மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீரில் உள்ள இரும்பு தாதுவின் அளவினை குறைத்து நீரை சுத்திகரித்திடும் நிலையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.5 கோடி மதிப்பில்
கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே குடிநீர் கலங்கலாக வந்தது. அதனால் கலங்கல் இல்லாமல் குடிநீர் வழங்க இந்த பணி நடக்கிறது. செப்டம்பர் 20-ந் தேதிக்குள் பணிகள் முடிவடைந்துவிடும்.
இதன் மூலம் 28 மில்லியன் லிட்டர் குடிநீர் மாநகர மக்களுக்கு வழங்க முடியும். இதனால் மாநகர மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். மழை வந்ததாலும், போக்குவரத்து காரணமாகவும் இரவுநேரத்தில் சாலை அமைக்க வேண்டி உள்ளது. இதனால் சாலை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறையில் இருந்து லாப நோக்கம் கூடாது. மக்களுக்கு சேவை மட்டுமே செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளாரே? என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்டபோது, பதில் அளிக்காமல் சிரித்துவிட்டு சென்றார்.
ஆய்வுக்கூட்டம்
இதனை தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். கொரோனா காலகட்டத்தில் வசதி படைத்தவர்கள் வாக்களிக்க வெளியே வர பயந்தார்கள். ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தைரியமாக வந்து வாக்களித்து எங்களை தேர்ந்தெடுத்தார்கள். இந்த மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்" என்று பேசினார்.
இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ சார்பில் ரூ.30 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் 145 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தலைமை பொறியாளர் (பொறுப்பு) சிவபாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.