வேலை நிறுத்தத்தால் கட்டுமான பணிகள் பாதிப்பு: பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்-கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
வேலை நிறுத்தத்தால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என சேலம் மாவட்ட கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வேலை நிறுத்தம்
கல்குவாரிகள், ஜல்லி, கிரஷர்களுக்கு அரசு விதிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையை தளர்த்த வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் போர்வையில் கல்குவாரிகளின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக கல்குவாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், சேலம் மாவட்ட கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது.
வேலை நிறுத்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 75 கல்குவாரிகள் உள்ளன.
எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் இதுவரை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை. வேலை நிறுத்த காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நீடிக்கும்
ஏற்கனவே 2013-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைபோல் கனிமவள விதிகளின்படி அனைத்து குவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும்.
குவாரிகள் அனுமதி பெறும் உரிமத்தை எளிமையாக்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. எனவே கல்குவாரி சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களது போராட்டம் நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சேலம் மாவட்ட கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் கோபால், நாமக்கல் மாவட்ட செயலாளர் மணி மற்றும் உறுப்பினர்கள் ராஜ்குமார், ரமேஷ்குமார், ஜீவா உள்பட பலர் உடனிருந்தனர்.