அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மையம் பணி விரைவில் தொடக்கம்
சேலம் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மையம் கட்டுமான பணி விரைவில் தொடங்குகிறது.
சேலம்,
வெள்ளி பொருட்கள்
சேலத்தில் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, கந்தம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, பள்ளப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளி பட்டறைகள் அதிகளவில் உள்ளன. வெள்ளி பொருட்கள் உற்பத்தியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசு, கைவினை கலைஞர்களால் செய்யப்படுவதாலும், கலைநயத்துடன் இருப்பதாலும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
வெள்ளி கட்டியை உருக்கி 20-க்கும் மேற்பட்ட நிலைகளுக்கு சென்ற பிறகே கொலுசு முழு வடிவம் பெறுகிறது. இதனால் ஒவ்வொரு பட்டறைக்கும் வெள்ளியை கொண்டு செல்லும்போது போக்குவரத்து செலவு, காலவிரயம், வீண் அலைச்சல் உள்பட பல்வேறு சிக்கல் நிலவுகிறது. எனவே, அனைத்து நிலைகளும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டும் என்றால் சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மையம் ஏற்படுத்த வேண்டும் என்று வெள்ளி பொருட்கள் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.25 கோடியில் மையம்
இந்த நிலையில், ரூ.25 கோடியில் வெள்ளி உற்பத்தி மையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக இரும்பாலை ரோட்டில் அரியாகவுண்டம்பட்டியில் 1.2 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து அங்கு மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது நிறைவடைந்தவுடன் விரைவில் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது:-
தமிழக அரசுக்கு நன்றி
சேலம் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் வெள்ளி உற்பத்தி பன்மாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இது நடுத்தர, கீழ் நிலையில் உள்ள வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மண் பரிசோதனை முடிவடைந்து அதன் அறிக்கை வந்தவுடன் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். ஒரே கட்டிடத்தில் அனைத்து பட்டறைகளும் செயல்படும் பட்சத்தில் வெள்ளிக்கட்டியை கொண்டு வந்தால் கால் கொலுசு, அரைஞாண்கயிறு உள்ளிட்ட வெள்ளி பொருட்களாக வெளியே கொண்டு வரப்படும். வெள்ளி உற்பத்தி மையம் மூலம் வெள்ளி கொலுசு தொழில் மேலும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.