கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை
நெல்லையில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லையில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கட்டிட தொழிலாளி
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 58), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு அங்குள்ள முப்புடாதி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவரும் தற்போது லட்சுமிபுரத்தில் வசித்து வருபவருமான கணேசன் (55) என்பவர் அங்கு வந்தார். இவர் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் ராஜா செலவுக்கு கடன் வாங்கி இருந்தார். நேற்று இரவு கடன் தொகையை திருப்பி தருமாறு ராஜாவிடம் கணேசன் கேட்டார்.
அடித்துக் கொலை
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ராஜா மயங்கி கீழே சரிந்தார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ராஜாவை மீட்டு வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராஜா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதே நேரத்தில் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கு மாரியம்மாள் என்ற மனைவி, 1 மகன், 3 மகள்கள் உள்ளனர்.