கட்டிட தொழிலாளி கொலை


கட்டிட தொழிலாளி கொலை
x

மயிலாடுதுறை அருகே பாட்டிலால் தாக்கி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய மகன் ராஜ்குமார்(வயது20). கட்டிட தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் பணிக்கு சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் பகுதியில் மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தி கொலை செய்யப்பட்டு ராஜ்குமார் பிணமாக கிடந்தார்.

விசாரணை

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்போில் மயிலாடுதுறை ரயில்வே போலீசார் மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கிடைத்த தகவல்படி போலீசார் சித்தர்காட்டை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன் (22) மற்றும் மகாதானபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவா்களிடம் நடத்திய விசாரணையில் கபிலன் மற்றும் சிறுவன் மீது மின்கம்பிகளை திருடியதாக ராஜ்குமார் பழி சுமத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து 2 பேரும் சோ்ந்து ராஜ்குமாருக்கு மது வாங்கி கொடுத்து அவரை அழைத்து சென்று அடித்துக் கொன்றது தெரியவந்தது. கட்டிட தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story