திறன் பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்


திறன் பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திறன் பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து தமிழ்நாடு கட்டுமான கழகம் நடத்தவுள்ளது. இதில் 3 மாத கால திறன் பயிற்சியை பெற கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து இருக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஒரு வார கால பயிற்சியை பெற கட்டுமான தொழிலாளா்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 3 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

2 பயிற்சியும் தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த பயிற்சியில் சேர விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் எண்.23/A, தாய் இல்லம், அண்ணாநகர் மெயின்ரோடு, கள்ளக்குறிச்சி- 606202 என்ற முகவரியில் உள்ள கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பயிற்சிகள் வருகிற 15-8-2023 முதல் தொடங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story