கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெண்ணைமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், சிங்காரவேலு, ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த மனுக்களை ஆண்டு கணக்கில் கிடப்பில் போடாமல் விரைந்து பணப்பயன்களை வழங்கிட வேண்டும். பெண் தொழிலாளிக்கு 55 வயதில் பென்ஷன் என்ற வாரிய கூட்ட முடிவை அமலாக்கி அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். மழைகாலங்களில் வேலையில்லா கால நிவாரணம் ரூ.2 ஆயிரம், தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். 1-ம் வகுப்பு முதல் கல்வி உதவி வழங்கிட வேண்டும். திருமண உதவி நிதி ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.