ரூ.121 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், அரசு சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகள்


ரூ.121  கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், அரசு சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில், ரூ.121 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

புதிய கலெக்டர் அலுவலகம்

மயிலாடுதுறையில், 2 லட்சத்து 82 ஆயிரத்து 884 சதுர அடி பரப்பளவில் கீழ்தளம் அல்லாமல் 7 தளங்களுடன் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், 10 ஆயிரத்து 415 சதுர அடி கொண்ட புதிய அரசு சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு முதல் தளத்தில் உள்ள அலுவலக அறை, கூட்டரங்கு, காணொளி காட்சி அரங்கு மற்றும் இரண்டாவது தளம், ஏழாவது தளம் ஆகியவைகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மோட்டார் சைக்கிள் நிறுத்தகம் கட்டப்பட்டு வருவதையும், கழிவறைகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

சுற்றுலா மாளிகை..

தொடர்ந்து, 10 ஆயிரத்து 415 சதுர அடி பரப்பளவில் ரூ.6 கோடியே 48 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அரசு சுற்றுலா மாளிகை கட்டிடமானது மொத்தம் 8 படுக்கை அறையும், கழிப்பறைகள், காத்திருப்பு அறை, சமையல் அறை, சேமிப்பு அறை, பாதுகாப்பாளர் அறை, மின்சாதன அறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகளை விரைவாக ஒப்பந்த கால கெடுவிற்குள் முடிக்குமாறு பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ராமர், அல்மாஸ்பேகம் மற்றும் அரசு அலுவலர்கள், பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story