கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும்தமிழ்நாடு நலவாரிய தலைவர் பொன்குமார் வலியுறுத்தல்


கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும்தமிழ்நாடு நலவாரிய தலைவர் பொன்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நலவாரிய தலைவர் பொன்குமார் வலியுறுத்தினார்.

விழுப்புரம்


ஆலோசனைக்கூட்டம்

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் என்கிற அண்ணாத்துரை தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குமார், மணிகண்டன், கார்த்தி, ஏழுமலை, தரணி, இணை செயலாளர்கள் தேவதாஸ், அபிராமன், துணை செயலாளர்கள் சுரேஷ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பொன்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலை நிர்ணயக்குழு

மக்களுக்கு அதிகம் வேலை தரக்கூடிய கட்டுமானம், மனைத்தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும், இத்தொழிலுக்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் நீக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க ஏனாதிமங்கலத்தில் அரசு மணல் குவாரி திறந்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தரமான எம்சாண்ட் கிடைக்க அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவோ அல்லது விலை நிர்ணயம் செய்யவோ கட்டுமான உரிமையாளர்கள், தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் அடங்கிய பிரதிநிதிகளை கொண்ட விலை நிர்ணயக்குழுவை அரசு அமைக்க வேண்டும்.

கட்டுமான தொழிலுக்கு பெரிய தடையாக உள்ள ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரும் என்று காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மோடி அரசாங்கம் அதானி, அம்பானிக்கு ஆதரவாக செயல்படாமல் கட்டுமான துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையில் மாநாடு

அ.தி.மு.க.வை கைப்பாவையாக ஆக்கிக்கொண்டு மோடி செய்யும் தில்லாலங்கடி வேலை தமிழகத்தில் எடுபடாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை மக்கள் கொடுப்பார்கள். சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் நினைவாக பேனா வைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிகிறதோ அப்போதெல்லாம் மக்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். கருணாநிதியின் நினைவாக அவரது நினைவிடத்தில் பேனா வைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அற்பத்தனமானது. வருகிற மார்ச் 12-ந் தேதி கோவையில் கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story