ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்


ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

திண்டிவனம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அனைத்து வியாபாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாாிகள் பேசுகையில், திண்டிவனம் நேரு வீதியில் உள்ள வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால், எப்போதும் அப்பகுதியில் நெரிசல் அதிகமாக காணப்படும். மேலும் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை, பெங்களூரு, வந்தவாசி, காஞ்சீபுரம், திருப்பதி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கும் இந்த வழியாக செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்குள்ள ஆக்கிரமிப்புகளை நாங்கள் அகற்ற வருவதற்கு முன்பாக வியாபாரிகள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ளுங்கள் என்றனர்.

இதற்கு பதலளித்து வியாபாரிகள் பேசுகையில், திண்டிவனம் நேரு வீதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததாலும், ஒரு வழி பாதையில் போக்குவரத்து விதி முறையை மீறி வாகனங்கள் செல்வதாலும் நடைபாதை கடைகளாலும் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டினர். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். காய்கறி மார்க்கெட்டுக்கு தனியாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சாலைகளில் சுற்றத்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

இதில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, தாசில்தார் அலெக்சாண்டர், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் நாகேஸ்வரி, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நகராட்சி பொறியாளர் பவுல் செல்வம்உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளால் தாமாக முன்வந்து வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது.


Next Story