வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம்


வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடிமறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடிமறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தல்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் செய்வது தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 578 வாக்காளர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 183 வாக்காளர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 932 வாக்காளர்களும் உள்ளனர்.

வரும் 1.1.2024 நாளினை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், உரிய படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது இணைய வழியிலோ விண்ணப்பித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தும் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்திட ஏதுவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 412 இடங்களில் 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 857 வாக்காளர்கள் என்ற நிலையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு மற்றும் மறு ஆய்வு செய்யப்பட்ட வகையில் பழுதான மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்கள், வாக்குச்சாவடியில் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளை பிரித்தல், வாக்காளர் வசதிக்கேற்ப பிரிவுகளை பிரித்தல் உள்ளிட்ட காரணிகளை அனுசரித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடத்தப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதற்கு முன் வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட 74 வாக்குச்சாவடிகளை தற்சமயம் புதிய கட்டிடங்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளின் அடிப்படையில்

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ், தனி தாசில்தார் (தேர்தல்) விஜயராகவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story