புதிதாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த ஆலோசனை கூட்டம்


புதிதாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த ஆலோசனை கூட்டம்
x

நாமக்கல்லில் புதிதாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.

நாமக்கல்

புதிய வாக்குச்சாவடிகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை புதிதாக ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். இதில் வாக்குச்சாவடி கட்டிட மாற்றம், அமைவிடம் மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,627 வாக்குச்சாவடிகளில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்திட ஆலோசிக்கப்பட்டது.

வேறு இடத்திற்கு மாற்றம்

மேலும் 2 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை அருகில் வேறு இடத்திற்கு மாற்றவும், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் போன்ற மாறுதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 23 வாக்குச்சாவடிகளை கட்டிட மாற்றம் மற்றும் அமைவிடம் மாற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதேபோல் நாமக்கல் நகராட்சியில் சில வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்த கோரிக்கை எழுந்ததன் பேரில், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், உதவி கலெக்டர்கள் சரவணன், சுகந்தி மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story