மருத்துவ மேற்படிப்புக்கு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


மருத்துவ மேற்படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

மருத்துவ மேற்படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

2022-2023-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு (எம்.டி-எம்.எஸ்), டிப்ளமோ படிப்பு, பல் மருத்துவ மேற்படிப்பு (எம்.டி.எஸ்) மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான (டி.என்.பி) விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 'ஆன்லைனில்' பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (நேற்று) தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றன.

இவை அனைத்திற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 23 அரசு கல்லூரிகள் மற்றும் 16 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 346 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த 22-ந்தேதி முதல் இணையதள வழியாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. இது வருகிற அக்டோபர் 3-ந்தேதி மாலை 5 மணிக்கு முடிவு பெறும். நேற்று (நேற்று முன்தினம்) வரை 21 ஆயிரத்து 183 பேர் விண்ணப்பங்கள் பெற பதிவு செய்துள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 429 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

421 பேருக்கு இன்புளூயன்சா

தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு முன்பு தினந்தோறும் 100 பேர் அளவில் இன்புளூயன்சா (எச்.1.என்.1) வகை காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) பாதிப்பு குறைந்து 56 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் என மொத்தம் 421 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் முகாம்கள் தமிழகத்தில் கடந்த 21-ந்தேதியில் ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. தொடர்ந்து 3-க்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகும் இடங்களில் முகாம்கள் நடைபெற அறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் கடந்த 7 நாட்களில் 6 ஆயிரத்து 471 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றது. அதேபோல் பள்ளிகளில் 15 ஆயிரத்து 900 வாகனங்களின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அமைச்சருக்கு பாதிப்பு

இந்த முகாம்களில் இதுவரை 15 லட்சத்து 66 ஆயிரத்து 77 பேர் காய்ச்சலுக்காக பரிசோதனை செய்து இருக்கின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு நேற்று 344 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 68 பேர். தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 18 ஆயிரத்து 121 பேர் டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்.1.என்.1 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் கண்காணிப்பில் இருக்கும் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story